DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. மேலும், ஜனவரி 1, 2023 முதல் செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவை ஒப்புதல்
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (அதாவது நேற்று) முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது” என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை ஈடுகட்ட, அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38 சதவிகிதத்தை விட கூடுதல் தவணை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளில், ராஜஸ்தானிலும் ஒரு நற்செய்தி வந்துள்ளது.
அறிவித்த முதலமைச்சர்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2023 முதல் அகவிலைப்படியை 4% உயர்த்துவதாக இன்று அறிவித்தார். மாநில அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி, தற்போது 38% இல் இருந்து 42% ஆக உள்ளது.
இந்த நடவடிக்கையால் மாநில கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ.1640 கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தானின் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 4.40 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் தவணையை வழங்கியுள்ளார். மேலும், அகவிலைப்படி உயர்வு பஞ்சாயத்து சமிதி மற்றும் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.