பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி நடைபெற்ற வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதே சமயம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நேற்று முன் தினம் தீர்ப்பு வெளியான நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நேற்று அறிவித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே ராகுல் காந்திக்கு தண்டனைக் காலம் 2 ஆண்டுகளையும் சேர்த்து 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிலவுகிறது.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் தண்டனையை 30 நாள்கள் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் குஜராத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த முப்பது நாள்களுக்குள் அவர் நீதிமன்றத்தொல் தனது தரப்பை விளக்கி தண்டனையிலிருந்து தப்பவில்லை என்றால் சிறை செல்ல நேரிடும். அதன் பின்னர் வய நாடு மக்களவைத் தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த ஆறு மாத காலத்துக்குள் அங்கு இடைத் தேர்தலை நடத்தி மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவேளை நிலைமை ராகுல் காந்திக்கு எதிராக அமைந்து வயநாடு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்று விசாரிக்கையில் பலரும் பிரியங்கா காந்தியையே கை காட்டுகின்றனர்.
ராகுல் காந்தியை, காங்கிரஸை பழி வாங்கும் நோக்கில் பாஜக காய் நகர்த்தினால் அது காங்கிரஸுக்கு அனுதாப அலையை உருவாக்க செய்யும். வய நாட்டில் பிரியங்கா களமிறங்கினால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு வெற்றி அமைந்தால் பிரியங்காவை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என்கிறார்கள்.
மோடி Vs லேடி என்று மத்தியில் போட்டி உருவாகக்கூடும். 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அந்த மோடியா, இந்த லேடியா என கேட்டு வாக்குகளை அள்ளினார் ஜெயலலிதா. அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் பிரியங்கா காந்தியும் சவால் விடுவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.