ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனைக்கு தடைபெறாதது ஏன்?: பாஜ கேள்வி

பாட்னா: ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை பெறாதது ஏன் என்று பா.ஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பிற்கு பின், பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பாஜவின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘கர்நாடக தேர்தலில் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக தான், அவதூறு வழக்கில் ராகுலுக்கு  வழங்கிய  தண்டனைக்கு உடனடியாக தடை பெறுவதற்கு காங்கிரஸ்  முயற்சிக்கவில்லை. கர்நாடகா தேர்தலை மனதில் வைத்தே தனது புகழ்பெற்ற சட்ட நிபுணர்களை இதில் காங்கிரஸ் ஈடுபடுத்தவில்லை.   என்பதை பிரியங்கா காந்தியின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.  அதானிக்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால் ராகுல்காந்தி தனது  தகுதி நீக்கத்தை அதானி விவகாரத்துடன் இணைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.  

2019ம் ஆண்டு ராகுல் கூறிய அவதூறான கருத்துக்கள்  தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் தான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அதானி குழுமம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது, காங்கிரஸ் ஆட்சி செய்த ராஜஸ்தான்  போன்ற மாநிலங்களில் வர்த்தகம் செய்துள்ளது.  அதானி குறித்து நாடாளுமன்றத்தில் ராகுலின் பேச்சு அரசை திகைக்கவைக்கவில்லை. ராகுலின் பேச்சு அடிப்படையற்றது மற்றும் பொருத்தமற்றது. அவர் அவதூறான தனது வார்த்தைகளை கவனமாக தேர்வு செய்து பேசியுள்ளார் என்பதை இது நிரூபிக்கிறது. இது அவருடைய பழக்கமாக இருந்து வருகிறது. முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தாக்கல் செய்த வழக்கு உட்பட குறைந்தபட்சம் 7 அவதூறு வழக்குகளை ராகுல் எதிர்கொண்டுள்ளார். எதிர்கட்சி தலைவராக ராகுல் யாரையும் விமர்சிக்க தகுதியானவர். ஆனால் துஷ்பிரயோகம்  செய்வதற்கு அல்ல. அவரது கருத்துக்கள் உண்மையில் தவறானவை.  ஓபிசி பிரிவினரை இது இழிவுபடுத்தியுள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.