வாஷிங்டன்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தில் இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க முடியாது என்று விலகி நிற்கிறது அமெரிக்கா.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரிடம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சார்பில் மின்னஞ்சல் வழியாக கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அனுப்பப்பட்ட பதிலில், “சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எந்தவொரு ஜனநாயக தேசமாக இருந்தாலும் சட்டம் மற்றும் நீதித்துறை சுதந்திரமுமே அதன் மூலக்கல். மற்றபடி இப்போதைக்கு வழக்கு குறித்து நாங்கள் ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும் சில ஜனநாயக மாண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதை நிலைநிறுத்த அமெரிக்க அதிகாரிகள் எப்போதுமே இந்திய அரசுடன் தொடர்பில் இருக்கின்றனர். இதுதான் அமெரிக்கா – இந்தியா உறவின் அடித்தளம்.” என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.