புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் ஆனதால், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மக்களவை செயலக வட்டாரம், “ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த வயநாடு தொகுதி காலியான தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் , கேரள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் கிடைத்திருக்கும். இதன்பின்னர் அவர்கள் தான் நிலவரத்தை ஆராய்ந்து தேர்தலை அறிவிப்பது குறித்து முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதிக்கு தேர்தலை அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில முன்னுதாரணங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. லட்சத்தீவு எம்.பி, முகமது ஃபைசல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் வெறும் ஐந்தே நாட்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 13ல் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 18ல் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்திலும் ராம்பூர் தொகுதி எம்.பி. ஆசம் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதே பாணியில் வயநாட்டிலும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆசம் கான் வழக்கில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின்னர், உச்ச நீதிமன்றம் ஆணையத்தை காத்திருக்குமாறு அறிவுறுத்தியது. ஆசம் கான் மேல் கோர்ட்டில் தொடர்ந்த முறையீட்டு மனு விசாரணை வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியது. தேர்தல் ஆணையமும் அதனை ஏற்றது. செஷன்ஸ் நீதிமன்றம் ஆசம் கானின் மனுவை தள்ளுபடி செய்தபின்னர் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
அதேபோல், பைசல் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு சில வலியுறுத்தல்களை வெளியிட்டது. அதன்படி கேரள உயர் நீதிமன்றம் அவர் மீதான குற்றத்தீர்ப்பை தள்ளுபடி செய்ததால் அதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதனையடுத்து லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
அதனால் ராகுல் காந்தி விவகாரத்திலும், தேர்தல் ஆணையம் மேல் கோர்ட்டு முடிவைப் பொறுத்து அடுத்த நகர்வுகளை பரிசீலிக்க வேண்டியிருக்கும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தகுதிநீக்கமானது மேல் நீதிமன்றம் குற்றத்தீர்ப்பை தள்ளுபடி செய்தால் தானாகவே ரத்தாகிவிடும்.
இதுதொடர்பாக முன்னாள் மக்களவை செயலர் பிடிடி ஆச்சாரி கூறுகையில், “ராகுல் காந்தி தகுதிநீக்க அறிவிக்கையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர வயநாடு தொகுதி காலியானதாக குறிப்பிடப்படவில்லை. அதனால் தேர்தல் ஆணையம் காலியான தொகுதிக்கே தேர்தல் அறிவிக்க முடியும்” என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மக்களவை செயலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசியல் சாசன சட்டப்பிரிவு 103ன் படி தகுதிநீக்கத்தை குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவரே அதுபற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்பார். எனவே ராகுல் காந்தி மக்களவை செயலக அறிவிக்கையையே எதிர்த்து வழக்காட முடியும்” என்றார்.