புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் தொகுதியில் நேற்று கையோடு கை கோர்ப்போம் நடைபயணம் மேற்கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் தலைமை தாங்கினர். இதில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மிஷன் வீதியில் புறப்பட்ட நடைபயணம் கடற்கரை சாலை அருகே நிறைவுபெற்றது. பின்னர் நாராயணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது: “குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு மறுநாளே எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அதற்கு நரேந்திர மோடி துணையாக இருக்கிறார் என்று சொன்னதற்கு மோடி சமுதாயத்தையே ராகுல் காந்தி உதாசினப்படுத்திவிட்டார், அவமதித்துவிட்டார் என்று அந்த வழக்கு போடப்பட்டது. இது ஒரு பொய் வழக்கு. ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை விமர்சித்து எதுவும் பேசவில்லை என்பதை அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.
இது பழிவாங்கும் நடவடிக்கை. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி, நரேந்திர மோடியை எதிர்த்து நீங்கள் பிரதமராக இருந்து அதானியை பனிரெண்டரை லட்சம் கோடிக்கு அதிபராக்கி இருக்கிறீர்கள், பொதுத்துறை நிறுவனங்களை அவருக்கு வழங்கி இருக்கிறீர்கள். பல ஆயிரம் கோடி பங்குகளை அவர் அடமானம் வைத்து எல்ஐசி, தேசிய வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்.
அது திவாலாகி அவரது பங்கு சந்தை சரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரது அண்ணன் மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நிறுவனங்களை ஆரம்பித்து இந்தியாவில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இது சம்பந்தமாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டபோது ராகுல் காந்தி பேசுவதை நிறுத்த வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக மோடியின் திட்டமிட்ட சதிதான் இந்த பொய் வழக்கு. நாங்கள் இதனை இரண்டு விதங்களில் சந்திப்போம். ஒன்று சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அரசியல் ரீதியாக தெருவில் இறங்கி போராடுவோம்.
ராகுல் காந்தியின் ஜனநாயக உரிமை பறிப்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் பேச்சுரிமை பறிக்கின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதை எதிர்த்து பலக்கட்ட போராட்டங்களை நடத்த காங்கிரஸ் தலைமை கட்டளையிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.