ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து
கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய அளவில் கவனம் பெற்ற இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பவர்கள் கூட ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியும் தன்னுடைய விளக்கத்தை இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ ஆன்லைனில் கேம் விளையாடி ட்விட்டரில் அப்டேட் செய்து வருகிறார்.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
“எந்த முயற்சியும் இல்லாம சீட் கொடுக்க காங்கிரஸ் இருக்கு; தேர்தல் வந்தா தெருவுல இறங்கி வேலை செய்ய திமுக இருக்கு; கட்சிக்கு பிரச்சனை வர்றப்போ என்ஜாய் பண்ண நெட்ஃபிளிக்ஸ் இருக்கு; இதுக்கு மேல எதுக்கு கவலைப் படணும்..” என்று சாமி திரைப்படத்தின் த்ரிஷா புகைப்படத்தை போட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் ஏராளமான ட்ரோல்ஸ், மீம்ஸ் என அவரது பதிவின் கீழ் கமெண்ட்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக யாரேனும் ட்வீட் போட்டால் அதை மட்டும் ரீ ட்வீட் செய்துவிட்டு கேம் விளையாடி வரும் கார்த்தி சிதம்பரம் பொறுப்புணர்ந்து, கட்சியின் நிலை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அக்கட்சியினரின் விருப்பமாக உள்ளது.