காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராகுல் காந்தி மீதான இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன். இதோடு, அவரின் மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும். வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும்.
நாட்டையாளும் பா.ஜ.க அரசு தனது அதிகார பலத்தைக்கொண்டு, அத்துமீறலும் அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும்.
மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பா.ஜ.க அரசின் படுபாதகச் செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதிநீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும்.

இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் என்றால் மிகையாகாது. அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு, பாசிச பா.ஜ.க-வின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்” என்று சீமான் கூறியிருக்கிறார்.