ரூபாவின் பெறுமதி அதிகரித்தல் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் விவசாயத்திற்கு வழங்கும் உதவிகளினால் உரங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்கு தேவையான அனைத்து வகை உரங்களை விநியோகிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கமநல சேவை ஆணையாளரிடம் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை
உரம் வழங்கும் வேலைத்திட்டங்களை அடுத்த வருடம் முதல் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு சாகல ரத்நாயக்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன்போது உர விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கம் தலையிடப் போவதில்லை என சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரத்தை வழங்குவதற்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்றும், அரசாங்கம் பெறுகின்ற வெளிநாட்டு உதவிகளை உரத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி விலையை குறைக்க தலையிடுவதாகவும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அதற்கு மேல் உரம் வழங்குவதில் அரசாங்கம் தலையிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரூபாவின் பெறுமதி அதிகரித்தல் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் விவசாயத்திற்கு வழங்கும் உதவிகளினால் உரங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் எனவும் அவர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளின் நிலைப்பாடுளையும் கேட்டறிந்து கொண்டதன் பின்னர், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதற்கான முறையான அமைப்பைத் தயாரிக்குமாறு சாகல ரத்நாயக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.