ஆண்டிபட்டி: வைகை அணை – பேரணை இடையே சேதமடைந்துள்ள பாசனக் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம், மேலூர், திருமங்கலம் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து பாசனக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாசனக்கால்வாய், தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை உருவானது. கடந்த 6 மாதங்களாக வைகை
அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில், பாசனக்கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அரசு ரூ.23 கோடி 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்படி முதற்கட்டமாக வைகை அணையில் இருந்து பேரணை வரையிலான 32 கிலோமீட்டர் தூரமுள்ள பாசனக்கால்வாய் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமாக சேதமடைந்துள்ள இடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்திற்குள் முதற்கட்ட பணிகளை முடித்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்றும், எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல இந்த பாசனக்கால்வாயில் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்ட சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவரும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.