புதுடெல்லி: வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலை ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019-ல் அறிமுகம் செய்தது. இதன் முதல் சேவையை, புதுடெல்லி – வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ல் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிவைக்க உள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த ரயில் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரையும் மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி நகரையும் இணைக்க உள்ளது. இந்தப் பகுதியில் இந்தியாவின் அதிவேக ரயிலை பிரமாண்டமாக தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை வடகிழக்கு எல்லை ரயில்வே ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “வடகிழக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடங்கப்படும் என்பது உண்மைதான். பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 14-ம் தேதி குவாஹாட்டி வரும்போது இந்த சிறப்பு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
பிரதமர், தனது பயணத்தின் போது, 11,140 நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம் வாசிப்போர் பங்கேற்கும் பிஹு நிகழ்ச்சியை காண உள்ளார். நாட்டுப்புற நடனத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கின்னஸ் உலக சாதனைகளில் பதிவு செய்யும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.