வேலையே செய்யாம இருக்கணும்; அதுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: மெட்டா நிறுவன பெண் ஊழியரின் அனுபவம்…

வாஷிங்டன்,

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

மெட்டா நிறுவனத்தில், வேலை எதுவும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம், என்ற தலைப்பிலான அந்த வீடியோவில், மேடலின் வேலையில் இருந்தபோதே, வேறு புதிய பணியாளர்கள் யாரையும் பணியில் சேர்க்காமல் தனது நிறுவனம் எப்படி செயல்பட்டது என்பது பற்றி அவர் விளக்கி உள்ளார்.

அவரது கூற்றுப்படி, 2021-ம் ஆண்டில் அவர் பணியில் சேர்ந்த முதல் 6 மாதங்களுக்கும், பின்னர் ஓராண்டுக்கும் யாரையும் பணியில் சேர்க்கும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என தெரிவித்து உள்ளார்.

எனினும் அவரது இந்த வீடியோவால் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து, தனது பேச்சுக்கு அவர் வேறொரு விளக்கம் அளித்து உள்ளார்.

நான் வெளியிட்ட ஒரு வீடியோ தவறான வழியில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. மெட்டா நிறுவனத்தில் முதல் 6 மாத காலத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை மற்றும் எந்த வேலையும் செய்யவில்லை என நான் கூறியபோதும், வேலை எதுவும் செய்யாதபோதும் நான் கற்று கொண்டு இருந்தேன் என விளக்கம் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

எனினும், சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியானது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. இந்த முறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது, எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறியுள்ளார்.

பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் மற்றும் பரவலாக நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால், 2-வது முறையாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மிக பெரிய முதல் தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெற உள்ளது.

இதுதவிர, 5 ஆயிரம் பேரை புதிதாக பணிக்கு அமர்த்துவதற்கான திட்ட நடவடிக்கைகளும் கைவிடப்படும் என அறிவித்து உள்ளது. அவர்கள் இன்னும் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இதனால், அந்த வேலைக்கு பணியாளர்கள் வரும் முன்னரே, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மூடப்பட உள்ளன. சமீப காலங்களாக அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.