புதுடெல்லி,
நாட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 84-வது எழுச்சி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சத்தீஷ்காரில் அதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த சத்தீஷ்கார் நோக்கி 1,848 கி.மீ. தொலைவை பைக்கில் கடந்து சென்றனர். இதற்கான பயணம் கடந்த 9-ந்தேதி நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து தொடங்கியது.
இதனை மத்திய வெளிவிவகார அமைச்சக இணை மந்திரி மீனாட்சி லேகி இந்தியா கேட் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைத்து, அமைதி மற்றும் நல்லெண்ண செய்தியை பரவ செய்யும் நோக்கில் இந்த பயணம் அமையும் என குறிப்பிட்டார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் செய்தியை பரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த பயணம் 5 மாநிலங்களின் வழியே கடந்து சென்றது. இதன்படி ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் 17 நாட்கள் வரை பயணம் மேற்கொண்டு சத்தீஷ்காரின் ஜெகதல்பூரை இன்று அவர்கள் அடைந்தனர்.
அவர்களது இந்த பயணத்தில் பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் சுய உதவி குழுவினரையும் சந்தித்து அவர்களுக்கும் ஊக்கம் ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், 1,800 கி.மீ. தொலைவை பைக்கில் பயணித்து, கடந்து வந்த சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள், சத்தீஷ்காரின் ஜெகதல்பூரில் இன்று நடந்த 84-வது சி.ஆர்.பி.எப். எழுச்சி நாளில் பங்கேற்றனர்.
சாலையில் அலை கடலென கருப்பு உடையில் கமாண்டோ வீராங்கனைகள் பைக்கில் அணிவகுத்தபடி சென்றது கண்கவர் காட்சியாக இருந்தது. அவர்களில் 3 பேர் சத்தீஷ்காரை சேர்ந்தவர்கள் ஆவர்.
அதிலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் தோகாபால் பகுதியில் அமைந்த ராஜூர்காவன் என்ற பகுதியை சேர்ந்த சாரா காஷ்யப் என்பவரும் ஒருவர் ஆவார்.
இந்த நாளில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட சி.ஆர்.பி.எப். தின அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி அமித்ஷா சிறப்புரையாற்றினார். முதன்முறையாக சத்தீஷ்காரில் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என அவர் குறிப்பிட்டார்.
சி.ஆர்.பி.எப். வீரர்களின் முயற்சியால், இடதுசாரி தீவிரவாதம் நாட்டை விட்டு வெளியேறி விட்டது என அவர் கூறியுள்ளார். 3 லட்சம் படையினரில் மகளிர் பிரிவினரும் இடம் பெற்று இருப்பது மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அடையாளம் என அவர்களை சிறப்பாக குறிப்பிட்டும் பேசினார்.