198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி : இலங்கைக்கு பாரிய தோல்வி



நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

படவிளக்கம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஒக்லண்டில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிகபட்சமாக ஃபின் அலென் 51 ஓட்டங்களையும் ரேச்சன் ரவீந்திரா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

275 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிப்பதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.

இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணியால் பெற முடிந்தது.

அதிகபட்சமாக அஞ்சலோ மெத்தியூஸ் 18 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரத்ன 11 ஓட்டங்களையும் லஹிரு குமார 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய அனைத்து வீரர்களும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  

சிறப்பாக பந்துவீசிய ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுக்களையும் ட்ரல் மிச்சேல் மற்றும் பிளயர் ரிக்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரரராக ஹென்றி ஷிப்லி தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் 2 ஆவது போட்டி 28 ஆம் திகதி கிரைய்ஸ்சேர்ஸ்சில் நடைபெறவுள்ளது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.