IPL 2023 Preview : `புதிய கோச்; புதிய கேப்டன்!' புத்துயிர் பெறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?!

சமீப சீசன்களாக `சன்ரைசர்ஸ்’ என்பதை பெயரில் மட்டுமே தாங்கியிருக்கிறது ஹைதராபாத் அணி. அந்த அணியின் பெர்ஃபார்மென்ஸில் எந்தவித உதயமோ எழுச்சியோ வெளிப்பட்டிருக்கவே இல்லை. எல்லாமே சறுக்கல் மட்டும்தான். இந்நிலையில் வரவிருக்கும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது? அந்த அணியின் பலம் பலவீனங்கள் என்னென்ன? என்பதை பற்றிய ஓர் அலசல்.

கடந்த 2022 ஏலத்துக்கு முன்பு, பல்லாண்டு காலமாக‌ அணியின் முதுகெலும்பாக இருந்த வார்னரை முதலில் கேப்டன்‌ பொறுப்பிலிருந்து தூக்கியது சன்ரைசர்ஸ் அணி. அதன் பின்பு அணியிலிருந்தே விடுவித்தது. இதோடு நில்லாமல், உலகமே தங்கள் அணியில் இப்படி ஒரு ஸ்பின்னர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரஷித் கானை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்தது. எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே சென்று சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் பெரிதாக ஃபார்மில் இல்லாத வில்லியம்சனுக்கு 16 கோடி கொடுத்து கேப்டன் ஆக்கியது. அதுவும் சரிப்பட்டு வராமல் கடந்த ஆண்டு‌ தொடரின் முடிவில் எட்டாவது இடத்தில் அமர்ந்திருந்தது சன்ரைசர்ஸ்.‌ இது தான் சன்ரைசர்ஸின் சமீபத்திய எஸ்டிடி.

தவறுகளில் இருந்து பாடம் படிப்பது தான் அழகு. கடந்த ஆண்டு ஏலத்தில் செய்த தவறுகளுக்கு எல்லாம் ஓரளவு இந்த ஆண்டு ஈடு செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.

முதலில்‌ ரூ.16 கோடியை கொடுத்து கேப்டன் ஆக்கிய வில்லியம்சனை அணியிலிருந்து நீக்கியது. கூடவே ரூ.10.5 கோடி கொடுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரனையும்‌ நீக்கியது.‌ பணபலம் மிக்க அணியாக ஏலத்தில் கலந்து கொண்டது சன்ரைசர்ஸ். தனக்கே‌ உரிய பாணியில் ஏலம் விடுபவரைத் தவிர மற்ற‌ அனைவருக்கும் கைகளைத் தூக்கி வாங்க நினைத்து, அது சாத்தியமில்லாத காரணத்தால் 25 வீரர்களை வாங்கி தற்போது தொடருக்காகக் காத்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி

அணி வீரர்கள் மற்றும் வியூகங்களை எல்லாம் பார்க்கும் முன்பு, சன்ரைசர்ஸ் செய்த இரண்டு முக்கிய மாற்றங்களை தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு அணியில் ஏற்பட்ட ஏகப்பட்ட குழப்பங்கள் காரணமாக ஆளைவிட்டால் போதும்‌ என்பதாய் ஓடிவிட்டார்‌ பழைய பயிற்சியாளர் டாம் மூடி. அவருக்கு பதிலாக பிரையன்‌‌ லாரா தலைமை பயிற்சியாளராக‌‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளார். கூடவே, பட்டதே போதும் என்னும் விதமாக விடுவிக்கப்பட்ட வில்லியம்சனுக்கு பதிலாக, தென் ஆப்ரிக்காவின் மார்க்கரம்‌ கேப்டனாகியுள்ளார். இந்தாண்டு ஏலத்தில் ஹாரி ப்ரூக், க்ளாசன், மயங்க்‌ அகர்வால், அடில் ரஷீத், அகீல் ஹொசைன் ஆகியோருடன் சேர்த்து 13 வீரர்களை வாங்கியுள்ளனர்.

ஓப்பனிங் இப்போதே‌‌ உறுதியாக ஓரளவு தெரிகிறது.‌ கடந்த ஆண்டு 400 ரன்களுக்கு மேல் எடுத்த அபிஷேக் ஷர்மா மற்றும்‌‌ 8 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கிய மயங்க் அகர்வால் ஆகியோரும் தான்‌ துவக்கம் தர வேண்டியதிருக்கும். மயங்க் அகர்வாலின் அதிரடியும் அபிஷேக்கின்‌‌ நிதானமும்‌ பவர் பிளேயில்‌‌ அதிகபட்ச ரன்களை‌ பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மூன்றாம் இடத்தில் நிதிஷ் ராணா.

Aaiden Markram

அணி எந்த‌ நிலையில் இருந்தாலும் அதிரடி ஷாட்கள் மூலம்‌ அழுத்தத்தை எதிரணிக்கு‌‌ கடத்தும் இவர் போன்ற வீரர்கள் எல்லாம் ஒவ்வொரு அணிக்கும் வரம் போன்றவர்கள். பத்து அல்லது பன்னிரண்டு பந்துகளில் இவர் ஒரு 25 ரன்கள் எடுத்தால் கூட அணியின் வெற்றியில் இது அதிக பங்களிக்கும். மிடில் ஆர்டரில் கேப்டன் மார்க்ரம், ஹாரி ப்ரூக் மற்றும் கிளாசன் ஆகியோர் உள்ளனர்.‌

மார்க்ரம்‌ சமீபத்தில் முடிந்த‌ SA20 தொடரில்‌ கேப்டனாக மட்டுமல்லாமல் வீரராகவும் ஜொலித்து அரையிறுதி ஆட்டத்தில் சதம்‌ எல்லாம் அடித்து அசத்தி இருந்தார்.‌

இவர் மற்றும்‌‌ ஹாரி ப்ரூக் இருவருமே‌ ஸ்பின்னர்களை எளிதாக சமாளிக்கும்‌‌ திறனாளிகள் என்பதால் இவர்களின் தேவை மிடில் ஓவர்களில் நிச்சயம் சன்ரைசர்ஸ் அணிக்கு தேவைப்படும்.

சன்ரைசர்ஸ் அணி தொய்வாக காணப்படும்‌ ஒரு இடம்‌ என்றால் அது லோயர் ஆர்டர் பேட்டிங் தான். கிளாசன் மற்றும் வாஷிங்டன் ஆகியோரை நம்பி களம் காண வேண்டும். வேண்டுமென்றால் கிளாசனுக்கு பதிலாக பிளிப்சை முயற்சிக்கலாம். ஆனால் இவருமே அனுபவமில்லாத வீரர் தான். வாஷிங்டனின் பேட்டிங்கை விட அவரது பந்துவீச்சு தான் இந்தாண்டு அணியின் போக்கை தீர்மானிக்கப் போகிறது.

Harry Brook

பந்துவீச்சை பொறுத்தவரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியர்களாக அமைந்தது மிகப்பெரிய பலம். தமிழக சூப்பர்ஸ்டார் நடராஜன், அனுபவ புவனேஸ்வர் குமார் மற்றும் இவர்களுடன் காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்.‌ வேகம், ஸ்விங், டெத் பவுலிங் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அணியாக காட்சி தருகிறது.‌ மூன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் சுழலுக்கு அடில் ரஷீத் அல்லது‌ அகீல் ஹொசைன் போன்ற‌ வெளிநாட்டு வீரரை பயன்படுத்தலாம். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்றால் மார்க்கர்மை ஸ்பின் வீசச் செய்து யான்சென் போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வரலாம்.

Impact player விதிமுறை இந்தாண்டு முதல் வருவதால், முதல் லெவனில்‌ மூன்று‌ வெளிநாட்டு வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு நான்காவது வெளிநாட்டு வீரரை impact வீரராக கொண்டு வரலாம். மேலும்‌ மார்கண்டே, தாகர், விவ்ராந்த், அண்மோல்ப்ரீத் ஆகிய டொமஸ்டிக் வீரர்களின் பங்களிப்பையும் அவ்வப்போது எதிர்பார்க்கலாம். கடந்த முறை ஏலத்தில் செய்த தவறை எல்லாம் இம்முறை சன்ரைசர்ஸ் திருத்தி உள்ளது.

வெளியே இருந்து பார்ப்பதற்கு சக்தி வாய்ந்த அணியிகவே காட்சி தருகிறது. இனி களத்திற்கு உள்ளே‌ தவறுகள்‌‌ எதுவும் செய்யாத‌ பட்சத்தில் 2016ம் ஆண்டு மேஜிக்கை சன்ரைசர்ஸ் மீண்டும் இந்தாண்டு நடத்திக் காட்டலாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.