டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலர், அந்தக் கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அ.ம.மு.க தொண்டர்களும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அ.ம.மு.க கட்சியின் கூடாராம் காலியாகிவரும்போக்கு டி.டி.வி.தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விலகிய முக்கிய நிர்வாகிகள்:
மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே அ.ம.மு.க-விலிருந்து வெளியேறி அ.தி.மு.க-வுக்குச் செல்லும் படலம் ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக, அ.ம.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் ஆர்.கே.அன்பரசன், அ.ம.மு.க தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்த கே.கே.உமாதேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
அதைத் தொடர்ந்து மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனும் அ.ம.மு.க-விலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். மேலும், அ.ம.மு.க அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்த கே.கே.சிவசாமியும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
அப்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், “அ.ம.மு.க-வில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கொடுத்து நல்ல நிலையில்தான் வைத்திருந்தோம். ஆனால், சொந்த காரணங்களுக்காக இப்போது சிலர் கட்சியைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள்!” எனத் தெரிவித்தார்.
காலியான மாவட்டங்கள்:
இந்த நிலையில், அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல் மாவட்டவாரியான நிர்வாகிகள், தொண்டர்களும் அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோமல் அன்பரசனைப் பின்பற்றி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க-வின் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வர்த்தக அணி போன்ற பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அ.ம.மு.க-விலிருந்து கூண்டோடு விலகிய கையோடு, சென்னையில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர், கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகளும் அ.தி.மு.க-வுக்குத் தாவப்போவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்த நிலையில், அ.ம.மு.க-விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த எழுத்தாளர் கோமல் அன்பரசனிடம் பேசினோம். “தனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க மக்களுக்காகவே இயங்கவேண்டும் என்பதுதான் அம்மாவின் கனவு. இன்றைய அரசியல் சூழலில் அம்மாவின் கனவை நிறைவேற்ற எடப்பாடியாரால் மட்டும்தான் முடியும். நிறைவேற்றமுடியாத நிறைய பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க-வை வலிமையாக எதிர்த்து, அடுத்தடுத்த தேர்தல்களில் வீழ்த்தவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்துவதுதான் சரி என முடிவெடுத்து அ.தி.மு.க-வுக்குச் சென்றிருக்கிறோம்.
தவிர, டி.டி.வி சொல்வதைப்போல சுய காரணங்களுக்காக ஒன்றும் செல்லவில்லை. அ.தி.மு.க-வை வழிநடத்தும் சரியான தலைமைத்துவம் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது. அதுதான் கள எதார்த்தமும்கூட!” எனப் பதிலளித்தார்.
இப்படியே அ.ம.மு.க-விலிருந்து விலகும் படலம் தொடர்ந்தால் டி.டி.வி.தினகரனின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.