அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மகன் திருமணம்; தஞ்சாவூரில் தடபுடல் ஏற்பாடுகள்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் மகன் டாக்டர் இன்பன், ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அண்ணாமலையின் மகள் டாக்டர் ரத்னா இருவருக்கும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மஹாராஜா மஹாலில் நாளை திருமணம் நடைபெறவிருக்கிறது. இன்று மாலை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருமண ஏற்பாட்டில் ஆர்.காமராஜ்

இதற்காக கடந்த சில தினங்களாக ஆர்.காமராஜ் தஞ்சாவூரில் முகாமிட்டு விமர்சையாக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக எங்கும் அ.தி.மு.க கொடிகளைக் கட்டியிருக்கின்றனர். மண்டபத்தின் அருகே சாலையோரத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ஃபிளக்ஸ் வைத்திருந்தனர். அதை போலீஸார் அகற்ற வேண்டும் என்றதால், போலீஸாருடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம் செய்தனர். “கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி தஞ்சாவூர் வந்திருந்தார்.

அப்போது 20 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலையின் இருபுறங்களிலும் தி.மு.க-வினர் கட்சி கொடியைக் கட்டியிருந்தனர். ஆங்காங்கே ஃபிளக்ஸ் வைத்தனர். அப்போது மெளனம் காத்த நீங்கள், இப்போது எங்களுக்கும் மட்டும் ஏன் நெருக்கடி கொடுக்கிறீர்கள்” என்றனர். அதற்கு போலீஸார், “எஸ்.பி ஆஷிஷ் ராவத் கொடி, ஃபிளக்ஸ் இருக்கக் கூடாது என மைக்கில் கூறிக்கொண்டே இருக்கிறார். மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது” என்று கூறியிருக்கின்றனர்.

ஆர்.காமராஜ்

முன்னாள் பகுதி கழகச் செயலாளர் சரவணன், உதயநிதி வந்தபோது கட்டப்பட்டிருந்த கொடி, ஃபிளக்ஸ் வீடியோவை போலீஸிடம் காட்ட, அவர்கள் அமைதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. வைத்திலிங்கத்தின் ஏரியாவான தஞ்சாவூரில், `டெல்டாவின் தளபதி’ என ஆர்.காமராஜிக்கு ஃபிளக்ஸ் வைத்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “உணவு, பந்தல், டெக்ரேஷன் என ரூ.50 லட்சம் செலவில் மகன் திருமண ஏற்பாட்டை ஆர்.காமராஜ் செய்திருக்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரத்துக்குப் பிறகு முதன் முறையாக தஞ்சாவூர் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு விமர்சையான வரவேற்பு கொடுக்க வேண்டும் என ஆர்.காமராஜ் நிர்வாகிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்.

தஞ்சாவூரில் ஓ.பி.எஸ்ஸுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

ஓ.பி.எஸ் அணியிலிருக்கும் வைத்திலிங்கம், சமீபத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த திருமண நிகழ்வு அமைய வேண்டும் என, வைத்திலிங்கத்திடமிருந்து எடப்பாடி அணிக்குச் சென்ற நிர்வாகிகளே பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். மயிலாடுதுறையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழ் பல்கலைக்கழகம் அருகே வைத்திலிங்கம் வரவேற்பு கொடுத்தார்.

வரும் வழியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த ஃபிளக்ஸை பார்த்து அவர் அப்செட் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வைத்திலிங்கம் தனக்கு நெருக்கமான ஆளுங்கட்சி அமைச்சர்கள் மூலமாக கட்சிக் கொடி கட்ட, ஃபிளக்ஸ் வைக்க நெருக்கடி கொடுத்து வருவதாக ஆர்.காமராஜ் தரப்பில் பேசப்படுகிறது. நாளை நடைபெறும் திருமணத்தை நடத்தி வைக்கத்தான் எடப்பாடி பழனிசாமி வருவதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் சட்டமன்றத் கூட்டத்தொடர், பொதுச்செயலாளர் வழக்கு விவகாரம் ஆகியவற்றால் இன்று நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

திருமண ஏற்பாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆளுங்கட்சி மற்றும் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து பேசுவார் எனக் கூறப்படுவதால் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.