கரூர், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வள்ளுவர் அரங்கில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில், ஆகம தமிழ் எழுச்சி மாநாடு தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் சேர்வளர் சீர் குமரகுருபர அடிகளார், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், கரூர் திருக்குறள் பேரவை மேலை பழனியப்பன், தமிழ் சித்தர் ஆன்மிகப் பேரவை தமிழ் ராஜேந்திரன், கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கமம் தலைவர் செ.துரைசாமி, தமிழ் காப்புக் கூட்டியக்கப் பொருளாளர் கவிஞர் இல.மணி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் பற்றாளர்கள், கல்லூரி மாணவ – மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள் குறித்து பேசியவர்கள்…
“சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கு அரசாணை வெளியிட, தற்போதைய சட்டமன்ற அமர்வு நிறைவு பெறுவதற்கும் முன்னதாகவே சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமெனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் கோயில்களைக் கட்டிய தமிழன், கற்சிலைகளைச் செய்தவன் தமிழன், வாயில் காப்பாளனாக இருந்தவனும் தமிழன். ஆனால், இன்று அனைத்துத் திருக்கோயில்களிலும் வழிபாட்டுச் சடங்காக தமிழ் இல்லை. எனவே, அனைத்து நிலைத் திருக்கோயிலும் வழிபாட்டுச் சடங்குகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெற தமிழக அரசு அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதேபோல், தமிழகத்தில் இயங்கி வரும் மாநிலப் பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம், பன்னாட்டுப் பாடத்திட்டம் மூலம் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும். கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை கல்லூரிகளிலும் முதல் கட்டமாக, அனைத்து வகுப்புகளிலும் தமிழை ஒரு பாடமாக வைத்து, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழக அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்வேறு துறை சார்ந்த அரசு ஆணைகள், திட்டங்கள், தீர்மானங்கள், செயல்முறைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
ஒரு சில மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழகத்திலுள்ள அனைத்து வகை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாகவும், அலுவலக மொழிகளாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பை (யுனெஸ்கோ) வலியுறுத்த தமிழக அரசு, மத்திய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருமணவிழா, புதுமனை புகுவிழா, ஆண்டு விழா, வெள்ளி விழா போன்ற நிகழ்வுகளையும், வாழ்வியல் சடங்குகளையும் தமிழிலேயே செய்ய வேண்டுமென தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழுக்கு என ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதைப் போல, தமிழகத்திலும் ஊடகங்களுக்கு ஒரு தர கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானம் உள்ளிட்ட 20 தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளோம்” என்றார்கள்.
இந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழ் காப்புக்கூட்டியக்கத்தின் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் சுப்பிரமணியன்…
“சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பாக, கடந்த 2021 ஆகஸ்ட் 19-ம் தேதி நீதியரசர்கள் ந.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கவனிக்கத்தக்க தீர்ப்பை வழங்கினர்.
அந்தத் தீர்ப்பில், ‘தமிழிலும் குடமுழுக்கு விழா நடத்தலாம்’ என்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக, ஒரு குழு அமைத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சென்று மக்களிடம் கருத்துக் கேட்க வழங்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, திருநெல்வேலிக்கு சென்று மக்கள் கருத்துக் கேட்பு நடத்திய கூட்டத்தின்போது சமஸ்கிருத ஆதரவு கொண்ட சிலர் கூட்டத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்து, கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
எனவே, தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஆகம விதிகள், மந்திரங்கள் செய்வதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை எடுத்துக் கூறும் வகையில், கரூரில் இப்போது முதலாவது ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இதனைக் கரூரில் நடத்துவதற்கு முக்கிய காரணம், கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் தமிழிலும் குடமுழுக்கு விழா நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளைதீர்ப்பு வழங்கியது.
எனவே, தமிழ் வளர்த்த கரூர் மண்ணில் முதலாவது மாநாடு பல்வேறு அமர்வுகளில் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் அடிப்படையில், முக்கியத் தீர்மானங்கள் அரசுக்கு வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதன்பிறகு பேசிய, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் ஏ.கே.ராஜன்,
“தமிழ் மொழி மீது தமிழக மக்களுக்குப் பற்று குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மற்ற மாநிலத்தவருக்கு இருக்கும் தமிழ் மொழி மீது உள்ள பற்றுகூட தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு இல்லை.
எனவே, தமிழ் மொழி பற்றும் பாசமும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கவே, உலகத் தமிழ் காப்புக் கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டு, இன்று முதலாவது ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு கரூரில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, தமிழ் வளர்ச்சிக்காக இந்த அமைப்பு பாடுபடும்” என்றார்.