தமிழக அரசியலில் அதிமுக – பாஜக இடையிலான உரசல் போக்கு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியில் சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் அண்ணாமலையின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
அண்ணாமலை ரிப்போர்ட்
அவரிடம் இரண்டு விஷயங்களை பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி ரிப்போர்ட் ஒன்றும் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த இரண்டு விஷயங்கள் என்னென்ன எனப் பார்க்கலாம். அடுத்த சில வாரங்களில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக தேர்தல்
ஏற்கனவே அம்மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 8 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். எனவே அவரின் கர்நாடக செல்வாக்கை பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியலை கைப்பற்ற பாஜக தலைமை விரும்புகிறது. இதையொட்டியே முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கர்நாடகாவில் தேர்தல் வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சில வரைவு திட்டங்களை அண்ணாமலை வழங்கியிருக்கிறார்.
தமிழக அரசியல் களம்
அடுத்து தமிழ்நாடு அரசியல் நிலவரம். இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதில்
தான் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற விஷயத்தையும் போட்டு உடைத்துள்ளார். இத்தகைய சூழலில் அதிமுகவை நம்பியிருந்தால் ஒன்றுமே கிடைக்காது. அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி விஷயம் இடைஞ்சலாகவே இருக்கும். பயன் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.
கூட்டணி வேண்டுமா?
அதுவே 2024ல் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும். அனைத்து தொகுதிகளிலும் பாஜகவினர் களத்தில் இறங்கி ஆர்வத்துடன் வேலை செய்வர். முக்கியமான பயிற்சியாக இருக்கும். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை தரும் என அறிவுறுத்தியுள்ளார்.
ரிப்போர்ட் கார்டு
இதையடுத்து அமித் ஷாவிடம் அளித்த ரிப்போர்ட்டில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தற்போதைய பலம், அவற்றின் வாக்கு சதவீதம் உள்ளிட்ட தகவல்களை பட்டியல் போட்டு கொடுத்துள்ளார்.
கட்சி தலைமை முடிவு
ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் சூழல், திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள், பாஜகவின் நிலை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தில் தான் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன?
மக்களின் மனநிலை, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்பு, மாவட்ட செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை பட்டியல் போட்டு கொடுத்துள்ளார். கடைசியாக கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் எனக் கூறி விட்டு அண்ணாமலை தமிழகம் திரும்பியதாக தெரிகிறது.