`வாரிஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதைக் கண்டித்து கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக தெரிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, தற்போது வாஷிங்டனில் இருக்கும் தூதரகத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த தனியார் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா என்பவர், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இது குறித்து அந்த ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி. அவர்களின் பாதுகாப்பால்தான் எனது வேலையைச் செய்ய முடிந்தது, இல்லையெனில் நான் இதை மருத்துவமனையிலிருந்து பதிவிட்டுக் கொண்டிருப்பேன்” எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், “நீங்கள் இந்திய அரசிடம் புகார் செய்யுங்கள்” என்று காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து, லலித்தை தாக்குகிறார்.
ஊடகவியலாளர் லலித்மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “வாஷிங்டன் டி.சி-யில் காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தின்போது, இந்திய மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுவதைக் கண்டோம். பத்திரிகையாளர் முதலில் வாய்மொழியாக மிரட்டப்பட்டார், பின்னர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டார். தாக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, சட்ட அமலாக்க நிறுவனங்கள் உடனடியாக பதிலளித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து தூதரகம், “ஒரு மூத்த பத்திரிகையாளர்மீதான இத்தகைய கடுமையான மற்றும் தேவையற்ற தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள், காலிஸ்தானி ஆதரவாளர்களின் வன்முறை மற்றும் சமூக விரோத போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த விவகாரத்தில் சட்ட அமலாக்க முகவர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.