திருச்சி: திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் மத்திய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலையின் மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தவர் இசக்கிமுத்து மகன் ரவி சங்கர்(37). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவி, 6 வயது மகனுடன் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார்.
மனைவியும், மகனும் ஊருக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ரவி சங்கர் வீட்டைவிட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரவி சங்கர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸார் அங்கு சென்று ரவிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்ட ரவி சங்கர், அதில் விளையாடி பல லட்ச ரூபாயை இழந்துள்ளார். இதற்காக அவர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
இக்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமலும், ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமலும் தவித்த அவர், நேற்று முன்தினம் இரவு அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இவர்கடன் தொல்லையால் ஏற்கெனவேஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர்.