ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது – அன்புமணி ராமதாஸ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து கடனாளியாகி நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ரவி இனியாவது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

அன்புமணி கோரிக்கை

திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிசங்கர் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை ஆளுநர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.