வாஷிங்டன்-அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 5 வயது சிறுமி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு, 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021 மார்ச்சில், அமெரிக்காவின் லுாசியானாவில் உள்ள ஹோட்டல் அறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மியா படேல், 5, என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது திடீரென குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி மியா படேல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜோசப் லீ ஸ்மித், 35, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், வாகன நிறுத்துமிடத்தில் மற்றொரு நபருடன் ஏற்பட்ட தகராறில், லீ ஸ்மித் துப்பாக்கியால் சுட்டதும், அந்த துப்பாக்கிக் குண்டு அருகில் இருந்த ஹோட்டல் அறையில் விளையாடி கொண்டிருந்தசிறுமி மியா படேல் மீது பாய்ந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது.
இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் டி மோஸ்லே, பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என, எந்த சலுகையும் இல்லாத, 60 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை, ஜோசப் லீ ஸ்மித்துக்கு வழங்கினார்.
மேலும், இது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதன் வாயிலாக, ஜோசப் லீ ஸ்மித்துக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்