சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுபாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை புனரமைக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர்கள் மற்றும் திருக்குளங்கள் புனரமைப்பு, திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் ஆகிய பணிகளை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது இப்பணிகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26.03.2023) சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
2023 – 2024 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்தும், 1,000 ஆண்டுகள் முற்பட்ட திருக்கோயில்களை புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்துதல், நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை விரிவிப்படுத்துதல், ஒருவேளை அன்னதானத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்துதல், திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் விரிவுப்படுத்துதல், ஒருகால பூஜை திட்டத்தில் பயன்பெறும் திருக்கோயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், யானை மண்டபம் கட்டுமானப் பணிகள், துளசியாபட்டினத்தில் நடைபெற்று வரும் அவ்வையார் மணி மண்டபம் கட்டுமானப் பணிகள், மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மையம் கட்டுமானப் பணிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் போன்றவை குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ. குமரகுருபரன்,இ.ஆ.ப., ஆணையர் க. வீ. முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் அர.சுதர்சன், பொ.ஜெயராமன், முனைவர் ந.தனபால், கி.ரேணுகா தேவி, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.