ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் இன்று அதிகாலை 2.16 மணியளனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்தியாவின் பல மாநிலங்களில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. குறிப்பாக டெல்லி – என்.சி.ஆர், உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் தொடங்கி 7 நாடுகளில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.