ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதய பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் 15 ஆம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தமனி நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சையும் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறு இளங்கோவன் சிறிய வீடியோவையுய்ம் வெளியிட்டார். அதில், தான் குணமடைந்து வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவேன் என்றும் கூறினார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சில தினங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்தது தொகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா நெஞ்சுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.