பெங்களூரு: சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்வதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வழக்கமாக கொண்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அம்மாநில எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில் 219 பேரின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 சதவீத எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 30 சதவீத எம்எல்ஏக்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். பாஜகவின் 112 எம்எல்ஏக்களில் 49 பேர் மீதும், காங்கிரஸின் 67 எம்எல்ஏக்களில் 16 பேர் மீதும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் 30 எம்எல்ஏக்களில் 9 பேர் மீதும், 4 சுயேச்சை எம்எல்ஏக்களில் 2 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 35 பாஜக எம்எல்ஏக்கள், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 8 மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் மீது மிக கடுமையான குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளன.
பாஜகவில் 118 எம்எல்ஏக்கள்: மொத்தமுள்ள எம்எல்ஏக்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த 118 எம்எல்ஏக்களில் 112 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சராசரியாக ஒரு எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ரூ.29.85 கோடியாக உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.48.58 கோடியாக உள்ளது. தற்போதைய காங்கிரஸ் மாநிலத்தலைவரும், கனகபூரா தொகுதியின் எம்எல்ஏவுமான டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருக்கிறது. அவருக்கு அடுத்த நிலையில் பி.எஸ். சுரேஷ் ரூ.416 கோடி, எம்.கிருஷ்ணப்பா ரூ.236 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளனர்.
மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.34 கோடியாகஉள்ளது. 4 சுயேச்சை எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.40.92 கோடியாக இருக்கிறது. கர்நாடக எம்எல்ஏக்களில் 73 பேர், அதாவது 33 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளனர். 140 எம்எல்ஏக்கள் பட்டதாரிகளாக இருக்கின்றனர். 2 பேர் மட்டும் முனைவர் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.