போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பங்கேற்றவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே உடற்தகுதியுடன் தேர்வாகினர். உடற்தகுதி இல்லை என 4880 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
புதுச்சேரி போலீசில் 253 கான்ஸ்டபிள், 26 டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. கான்ஸ்டபிள் பணிக்கு 14,045 பேரும், டிரைவர் பணிக்கு 877 பேர் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த 13ம் தேதி முதல் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. உடல் எடை, உயரம் சரிபார்க்கப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஜாக்கெட் அணிந்து கொண்டு முதலில் 2.50 நிமிடத்தில் 800 மீட்டர் ஓட்டம் (கோரிமேடு போலீஸ் மைதானம் 2 ரவுண்ட்) முடிக்க வேண்டும். அதன்பின்பு, 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 1.20 மீட்டர் உயரம் தாண்டுதலும், கடைசியாக 15 நொடியில் 100 மீட்டர் ஓட்டத்தை முடிக்க வேண்டும்.
இதுவரை மொத்தம் 10,500 பேர் அழைக்கப்பட்டதில், 6848 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர். இவர்களில் 1968 பேர்உடல் தகுதி தேர்வில், தகுதி பெற்றுள்ளனர். இது பங்கேற்றவர்களில் 28 சதவீதமாகும்.
மொத்த 253 இடங்களில் 83 இடங்கள் பெண்களுக்கும், 170 ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 1968 பேர் போட்டி தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் ஒரு கான்ஸ்டபிள் இடத்திற்கு 12 பேர் போட்டியிடுகின்றனர்.
துல்லியமான தேர்வு
உடற்தகுதி தேர்வில் 800 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் முடிக்க முடியாமலே வெளியேறினர். மைக்ரோ சிப் பொருத்தி தேர்வு நடப்பதால், 15 நொடியில் கடக்க வேண்டிய 100 மீட்டர் ஓட்டத்தை 15.01 மைக்ரோ நொடியில் கடந்தால் கூட தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறி அனுப்பப்பட்டனர்.
போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்களின் உடமைகளை சோதித்தபோது, பலரது பைகளில் சிகரெட் லைட்டர்கள் அதிக அளவில் இருந்தது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. பல இளைஞர்கள் பொழுதுபோக்கிற்கு வருவதுபோல் உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்; போலீஸ் தேர்வுக்கு வருவோரில் 90 சதவீதம் பேருக்கு, உயரம், எடை எல்லாம் சரியாக உள்ளது.
ஆனால், சரியான பயிற்சி, உடல் திறன் இல்லை. முதல் ரவுண்டிலேயே வெளியேறி விடுகின்றனர். குறைந்தபட்சம் 6 மாதம் உடற்பயிற்சி எடுக்க வேண்டும். பொறுப்புணர்வு இன்றி ஒரிரு வாரம் பயிற்சி எடுத்து விட்டு சாதாரண தேர்வு என நினைத்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களும், விளையாட்டு துறையில் பயிற்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் தேர்வாகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்; புதுச்சேரியில் இளம் வயதினர் மதுபானம் மற்றும் புகை பழக்கத்திற்கு ஆளாகி உடல் பலவீனத்துடன் உள்ளனர். இதனால் போலீஸ் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் திரும்புகின்றனர்.
கடந்த சில ஆண்டிற்கு முன்பு புதுச்சேரியில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில், 1600 மீட்டர் ஓட்டத்தை கடக்க முடியாமல் புதுச்சேரி இளைஞர்கள் அனைவரும் வெளியேறினர். தமிழக பகுதியில் போலீஸ் பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் கடுமையாக ஓராண்டு வரை பயிற்சி எடுப்பதால் எளிதில் தேர்வாகி செல்கின்றனர்.
ஊர்காவல்படை தேர்வு
60 சப்இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 550 ஊர்காவல்படையினர் தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு மாதத்தில் வெளியாக உள்ளது.
எனவே, ஊர்காவல் படையில் சேர விரும்புவோர் இன்று முதலே உடற்பயிற்சியை துவங்கினால், எளிதில் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்