ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாளை இரவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாவட்ட தலைநகரங்களில், காந்தி சிலை முன்பு அறவழிப்போராட்டம் நடைபெற்றது.
மேலும், தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளனர். இந்நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாளை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை இரவு முழுவதும் சட்டமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
newstm.in