சிறுபான்மையினர் நல நிதியில் வெறும் 14% மட்டுமே செலவு! மத்திய அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி!

சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்!
நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், ”கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் எவ்வளவு உண்மையில் செலவிடப்பட்டது?. ஒதுக்கீடுகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சிறுபான்மை நல அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளனவா?, தற்போதைய நிதி ஒதுக்கீட்டின் நிலவரம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
image
வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது!
சு.வெங்கடேசன் எம்பியின் கேள்விக்கு பதிலளித்திருந்த மத்திய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2017 -18இல் துவங்கி 2022 – 23 நிதியாண்டு வரையிலான பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள். பின்னர் அதற்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் உண்மைச் செலவினம் போன்ற விவரங்களை தந்துள்ளார். அவர் அளித்திருக்கும் விவரங்களின் படி, 2022 – 23இல் சிறுபான்மை நலனுக்கான பட்ஜெட் தொகை 5020 கோடிகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகான திருத்தப்பட்ட மதிப்பீடு என்பது 2612 கோடியாக திருத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாக சிறுபான்மையினருக்கான நலத்திட்ட செலவினம் என்பது மார்ச் 17, 2023 வரை வெறும் 712 கோடிகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
image
மேலும் இதேபோல மற்ற நிதியாண்டுகளுக்கும் அமைச்சர் விவரங்களை தந்துள்ளார். அதில் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கான 6 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை நல அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இருக்கிறது என்றும், நலத் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
image
சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடே கேலிக்கூத்தாக இருக்கிறது!
மத்திய சிறுபான்மை அமைச்சரின் இந்த பதிலுக்கு பிறகு கருத்து தெரிவித்திருக்கும் எம்பி சு. வெங்கடேசன், மத்திய அமைச்சர் தந்துள்ள விவரங்கள் அதிர்ச்சியை தருகின்றன. 2018 -19 இல் துவங்கி 2022- 23 வரை எல்லா நிதியாண்டிலும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் குறைவாகவே உள்ளது. 2018 -19இல் 82 %, 2019 – 20இல் 95 %, 2020 – 21இல் 79% மற்றும் 2021 – 22 நிதியாண்டை பொறுத்தவரையில் 90% என்பதாகவே உள்ளது. 2022 – 23 இல் பட்ஜெட் ஒதுக்கீடை விட உண்மைச் செலவினம் வெறும் 14 % மட்டுமே தற்போதைய மார்ச் 17, 2023 வரை ஆகியுள்ளது. இது பேரதிர்ச்சி தரும் விவரம் ஆகும். மேலும் இந்த நிதியாண்டு முடிவுபெற இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை நெருங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.
image
2020 – 21 க்கு பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடே பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் வெகுவாக குறைந்து விட்டது. 2022 – 23 இல் திருத்தப்பட்ட மதிப்பீடே 52 சதவீதம் ஆகவே உள்ளது. பட்ஜெட் என்பதே சிறுபான்மையினரை பொருத்த வரை கேலிக் கூத்தானாதாக இருக்கிறது என்று சு. வெங்கடேசன் எம். பி கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த முகப்பும் நிதி ஒதுக்கீடும் சரியாக பின்பற்றப்படவில்லை, ஆனால் எல்லாம் சரியாக நடக்கிறது என்கிறார்கள்!
image
மேலும் 2023 – 24 பட்ஜெட் ஒதுக்கீடே 38 சதவீதம் சரிந்துள்ளது. கல்வி உதவித் தொகை, திறன் மேம்பாடு ஆகியன எல்லாம் பெரும் வெட்டை சந்தித்துள்ளன. ஆனால் சிறுபான்மை நல அமைச்சர் ஒதுக்கீடுகள் போதுமானது என்கிறார். நிதி அமைச்சகத்திடம் எந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என்கிறார். ஆனால் திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகிறதாம். சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சு. வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.