இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள சட்ட நிலைமைக்கமைய, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மலேசியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜி.ஆனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்திடம் உள்ளமையினால் மீதமுள்ள பங்குகளை வாங்க அந்நிறுவனத்தை அழைக்க வேண்டும்.
அந்த நிறுவனத்தினர் விரும்பினால் புதிய முதலீட்டாளர்களையும் அழைக்கலாம். டெலிகாம் நிறுவனத்தை வாங்குவதில் இந்திய வர்த்தகக் குடும்பமான மிட்டல் குடும்பத்துக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனமும், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனமும், பிரித்தானியா வாழ் தொழில் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜாவுக்குச் சொந்தமான லைகா மொபைல் நிறுவனமும் ஆர்வம் காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் தற்போது இலங்கையில் ஏர்டெல் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றது.
விற்பனை செய்யப்படவுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான பௌதீகச் சொத்துக்களில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தொடர்புகொள்வதற்கு வசதியாக 5 நிலத்தடி கேபிள்களைக் கொண்ட கேபிள் அமைப்பே மிகவும் பெறுமதியான வளமாகும் என குறிப்பிடப்படுகின்றது.