தஞ்சாவூர், ராஜாராம் மடத்தெருவில் வசித்துவந்தவர் பிரதீப் (24). இவர் பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதீப் மீது பல வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டில் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கிவைத்து அக்கம் பக்கத்தினருக்கே தெரியாமல் விற்பனை செய்வதில் கில்லாடி என்கிறார்கள்.
இந்த நிலையில், கொண்டிராஜா பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சூர்யா ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு பிரதீப் வீட்டுக்குச் சென்று கஞ்சா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே போதையில் இருந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பிரதீப்பை திட்டியிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரதீப் தன்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகும் அங்கேயே நின்றுகொண்டு, அந்த மூன்று பேரும் பிரதீப்பிடம் தகராறு செய்திருக்கிறார்கள். அதையடுத்து கத்தி ஒன்றை எடுத்த பிரதீப், `போறீங்களா… இல்லை வெட்டவா’ என்று மிரட்டியிருக்கிறார். அப்போதும் அவர்கள் போகாததால், பிரதீப் கத்தியால் அவர்கள் கையில் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது.
அதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும், தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் பிரதீப்பை வெட்டியிருக்கின்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரதீப் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், பிரதீப்பைக் கொலைசெய்த மூன்று இளைஞர்களையும் கைதுசெய்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய சிலர், “தஞ்சாவூரில் கஞ்சா புழக்கம் எங்கும் பரவியிருக்கிறது. கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையிலும், கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த கரந்தைப் பகுதியில் சி.ஆர்.சி டெப்போ எதிரிலுள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை மூன்று இளைஞர்கள் பணம் இல்லாமல் மது கேட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் பிரச்னை செய்திருக்கின்றனர்.
அந்த வழியே சென்ற வாகனங்களை வழிமறித்துக் கத்தியைக் காட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அந்த வழியே சென்றவர்கள் அச்சத்துக்கு ஆளானார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில், நேற்று இரவு கஞ்சா வியாபாரியான இளைஞரைக் கொலைசெய்ததாகக் கூறி, போலீஸார் அந்த மூன்று இளைஞர்களைக் கைதுசெய்திருக்கின்றனர்.
நடுரோட்டில் கத்தியுடன் நின்று ரகளை செய்த மூன்று இளைஞர்கள் குறித்து வீடியோ வெளியான நிலையில், உடனடியாக போலீஸார் அவர்களைக் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் கொலை நடக்காமல் தடுத்திருக்கலாம்” என்றனர் ஆதங்கத்துடன்.