சென்னை: தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி அதாவது பூஜ்யம் என்கிற நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஞாயிறன்று மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சலுக்காக ஒரு சிறப்பு காய்ச்சல் முகாம்கள் கடந்த மார்ச் 10ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து இன்ஃபுளுயன்சா வைரஸ் H3N2 என்கிற இந்த காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி அதாவது பூஜ்யம் என்கிற நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறினார்.