மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் அதே ஊரில் ரயில் நிலையம் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்குத் தன் நண்பர் மூலம் கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஹேசல் ஜேம்ஸ் என்ற பெண் பழக்கமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹேசல், மாடல் போல புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இதையடுத்து ஹேசலும், ராஜேஷும் நெருக்கமாக பழகியிருக்கின்றனர்.
தொடக்கத்தில் ஹேசல் ஜேம்ஸ், தான் திருமணமாகாத பெண் என்று கூறி ராஜேஷிடம் பழகி வந்திருக்கிறார். சிறிது நாள்களுக்குப் பிறகு தனக்குத் திருமணமாகிவிட்டது. ஆனால், கணவர் இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். பிறகு, கணவர் இறக்கவில்லை என்றும், விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கிறது என்றும் ஹேசல் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ராஜேஷ் அவருக்கு ரூ.90,000 கடன் கொடுத்திருக்கிறார். பிறகு பல்வேறு காலகட்டங்களில் ரூ.20 லட்சம் பணம், அழகுச்சாதனப் பொருள்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை ஹேசலுக்கு கொடுத்திருக்கிறார். இதனிடையே ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ராஜேஸ் இது குறித்து ஹேசலிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது ஹேசல், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஹேசல், ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ராஜேஷ் ஹேசலிடம் தன்னுடைய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார்.
அப்போது ஹேசல், “பணத்தைத் திருப்பி தர முடியாது. பணத்தைத் திருப்பிக் கேட்டால் நான் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொள்வேன்” என மிரட்டியிருக்கிறார்.
சில நாள்களுக்குப் பிறகு ராஜேஷ் மீண்டும் தன் பணத்தை கேட்டிருக்கிறார். அப்போது ஹேசல், “ரூ .20 லட்சம் உனக்கு கொடுப்பதற்கு பதில், ரூ.2 லட்சம் கொடுத்தால் உன்னைக் கொல்வதற்கு ஆள் இருக்கிறது” என்று பகிரங்கமாக மிரட்டியிருக்கிறார். இதையடுத்து ராஜேஷ் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போத்தனூர் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர். அதில்தான் ஹேசல், இதேபோல பலரிடம் திருமணம் செய்துகொள்வதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.
ஹேசல் ஜேம்ஸ்மீது 420,406,506(2) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஹேசலின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தாய் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹேசலும் பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் இணைந்து, பிறகு அவரது நடவடிக்கைகளால் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
காவல்துறை அதிகாரி ஒருவரின் மகனை ஹேசல் காதலித்து வந்திருக்கிறார். பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். சமீபத்தில் குழந்தைளைப் பார்க்க வந்த கணவரை, தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் தாக்கி, அவருடைய உடைமைகளைப் பறித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு அதே போத்தனூர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது.
முக்கியமாக ஹேசல் தன் முதல் கணவரைக் கொலைசெய்ய திட்டமிட்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.