கும்பகோணம்: கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வழியாக புரி, கோனார்க், காசி, அயோத்தி, கொல்கத்தா என பல்வேறு ஆன்மிக தலங்களுக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில் சேவை குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகக் காசிக்கு ஆன்மிக ரயில் இயக்க வேண்டும் என கும்பகோணம் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், தென்னக ரயில்வே துறைக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் பாரத் கவுரவ் என்ற புண்ணிய தீர்த்த யாத்திரை திட்டத்தின் கீழ் வடஇந்திய ஆன்மீக சுற்றுலா ரயிலை, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்குவதற்கான அட்டவணையை தென்னகர ரயில்வே கடந்த 24-ம் தேதி வெளியிட்டது.
அதன்படி, கேரளா மாநிலம் கொச்சுவள்ளி ரயில் நிலையத்திலிருந்து மே 4ம் தேதி மாலை 7 மணிக்கு புறப்படும் இந்த சுற்றுலா ரயில் (வண்டி எண்:எஸ் இசட் பி ஜி 01), அன்றைய தினமே தமிழகத்தின் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி ரயில்நிலையங்களுக்கு வருகுிறது. மே 5-ம் தேதி விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகத் திருச்சி (காலை 6 மணிக்கு), தஞ்சாவூர் (6.55), கும்பகோணம் (7.30), மயிலாடுதுறை (8.05), சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் (12 மணி) வழியாகச் சென்று 13-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் செல்கிறது. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு 15-ம் தேதி, கும்பகோணம் (காலை 6.35), தஞ்சாவூர் (காலை 7.10), திருச்சி (காலை 8.10), திண்டுக்கல், மதுரை வழியாக கொச்சுவள்ளிக்கு இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.
இந்த 10 நாட்கள் ஆன்மீக சுற்றுலா ரயில் 4 மூன்றடுக்கு பெட்டிகள், 7 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 சமையற்கூட பெட்டி, 2 மின்சார உற்பத்தி பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகளோடு இயக்கப்படுகிறது. இதில் பயணம் மேற்கொள்ள பயணக் கட்டணம், தங்குமிடம், உள்ளூர் வாகனம், தென்னிந்திய உணவு வகைகள், சுற்றுலா வழிகாட்டி, காவலர், குடிநீர் உள்பட அனைத்திற்கும் மூன்றடுக்கு ஏ.சியில் ரூ.35,651-ம், படுக்கை வகுப்பில் ரூ. 20,367-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த சுற்றுலா ரயில் முழுவதும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதற்கானது. மேலும், பூரி ஜெகந்நாதர் ஆலயம், கோனார்க் சூரியனார் கோயில், கொல்கத்தா காளி கோயில், ராமகிருஷ்ண மடம், புத்தகயா, கயா, காசி விஸ்வநாதர் ஆலயம், அயோத்தி ராமர் கோயில், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.