நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காட்டேரி பூங்கா பகுதியில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக வாகனங்கள் ஊட்டி நோக்கிச் செல்லும் என்பதால் குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர்.
அப்போது, திருப்பூரில் இருந்து உதகை நோக்கி வந்த டாடா இண்டிகா காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சாக்கு மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்கள் மற்றும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டு பண்டில்கள் இருந்தனர். அதன் மதிப்பு சுமார் 2,59,000 ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் காரில் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை பறிமுதல் செய்து குன்னூர் காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காரில் பிடிபட்ட தொகையை கொண்டு சென்ற நபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. அவர் பழனி முருகன் கோயிலில் இருந்து அந்த பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை நீலகிரி மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக சென்றுள்ளார். சில்லறை பணத்தை அதிக கமிஷனுக்காக கொடுக்க பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அவரிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தினர். வாகன தணிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.