நெல்லை: முன்பதிவில்லாத 4 பொது பெட்டிகளுடன் நெல்லை முதல் தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று (26ம் தேதி) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு நெல்லை- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் (06040) இன்று (26ம் தேதி) மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும். மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு நாளை (27ம் தேதி) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.