சென்னை: சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி-20 நிதி கட்டமைப்பு மாநாட்டில் பணவீக்கம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஜி-20 கூட்டமைப்பின் நிதி கட்டமைப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வெள்ளி, சனி ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது.
இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து அரசின் நிதித்துறை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார் டெலி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பல்வேறு அமர்வுகளாக நடைபெற்ற இம்மாநாட்டில், உலக பொருளாதாரச் சூழல், உணவு, எரிசக்தி, காலநிலை மாற்றம், நிதிபரிமாற்றம், பணவீக்கம் போன்றவை குறித்தும் அவற்றில் ஏற்படும்சவால்களை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி, சர்வதேச நிதியம்,சர்வதேச எரிசக்தி முகமை, உணவு வேளாண் அமைப்பு உள்ளிட்டசர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
வாஷிங்டனில் மாநாடு: இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வாஷிங்டன் நகரில் ஏப்.12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளபல்வேறு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.