புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் கண்டன பேரணி நடைபெற்றது. நெல்லித்தோப்பு அண்ணா நகர் பகுதியில் தொடங்கிய பேரணி தொகுதி முழுவதும் சென்று ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜிவ்காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டிநகர் போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வலிறுத்தினார். எனினும், காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பிரதமர் மோடியின் திறமையின்மையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது.இதனை எடுத்துக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் பாஜக அவரது பாதயாத்திரயை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தது. காஷ்மீரில் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாது என கூறினார்கள்.
இதையும் தாண்டி பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடர்ந்தார். அவருக்கு பெருகி வரும் செல்வாக்கைப் பார்த்து, அதனை குறைக்க வேண்டும் என பிரதமர் நினைத்தார். அதற்கு திட்டமிட்டு நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அமெரிக்க உளவு நிறுவனம் அதானி குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதானியின் பலகோடி சொத்து சேர்க்கைக்கு மோடியே காரணம் என அந்த அறிக்கை கூறியது.
பிரதமர் மோடி மத்திய அரசின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், பைப் மூலம் எரிவாயு வழங்கும் உரிமம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளட்டவற்றை அதானிக்கு கொடுத்திருக்கிறார். 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 65 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். அதில் பல சமயங்களில் அதானி, அவரோடு பயணம் செய்துள்ளார். பல வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்படி பிரதமர் நரேந்திரமோடி தனது அதிகாரித்தை துஷ்பிரயோகம் செய்து அதானிக்கு இவற்றையெல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்கு காரணம் அதானி பிரதமர் நரேந்திர மோடியின் பினாமி. வங்கிகளில் அதானிக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மிகப்பெரிய இமாலய ஊழலை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். இதனை நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கேட்டார். ஆனால் இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை. இதனால் திட்டமிட்டு ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார். இப்போது ஆளுங்கட்சியினரே நாடாளுமன்றத்தை முடக்குகின்ற சரித்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி படைத்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தை நடத்தினால் அதானி விவகாரம் வெளியே வரும். நிலைக்குழு வைக்க வேண்டியிருக்கும். நரேந்திர மோடியின் மிகப்பெரிய ஊழல் வெளியே வந்துவிடும் என்பதால், அதனை மூடி மறைக்கவே ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்துள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை. ஆகவே தான் ராகுல்காந்தி, ”எனது பதவியை பறிக்கலாம், என்னை குறிவைத்து தாக்கலாம் அதற்கு கவலைப்படவில்லை. ஜனநாயகத்தை காக்க உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். நரேந்திரமோடியின் ஆட்சியை தூக்கி எறியும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.