மதுரை மாவட்டத்தில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை விலைக்கு வாங்கி வீடுகட்டியுள்ளார். ஆனால் அந்த இடம் ஏற்கனவே ராமன் என்ற பெயரில் பட்டா வாங்கி வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த கோபிலாலு மதுரை நகர் நில அபகரிப்பு பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் கோபிலால் இடத்தை வாங்குவதற்கு முன்பாகவே ராமன் என்பவரது பெயரில் பட்டா இருந்ததும், அதனை ராஜா செல்வராஜ் என்பவர் தனது தந்தையின் பெயர் ராமன் என்ற பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி இந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா பெற்றதும் தெரியவந்தது.
மேலும், இந்த பட்டா அப்போதைய துணை தாசில்தாராக இருந்த மீனாட்சி சுந்தரத்தின் அறிவுறுத்தலின் படி வழங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜா செல்வராஜ் மற்றும் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தாசில்தாரராக இருந்த மீனாட்சி சுந்தரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இருப்பினும் எதிர்தரப்பினர் அந்த ஜாமினை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதில், அவரது முன்ஜா மீன் ரத்தானது.
அதனால், போலீசார் தலைமறைவான தாசில்தாரை தேடி வந்த நிலையில் அவர் கடச்சனேந்தல் பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தனர்.