தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகளுக்கும் அப்பகுதி மக்கள் இன்று (ஞாயிறு) 21-ம் நாள் காரியம் நடத்தி வழிபட்டனர். இந்நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி, கடந்த 6-ம் தேதி இரவு 2 பெண் மற்றும் 1 ஆண் யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.
இந்த யானைகளின் உடல்கள் அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அங்கேயே பொக்லைன் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போதே சுற்று வட்டார கிராம மக்கள் 3 யானைகளை அடக்கம் செய்த இடத்தில் மலர் மற்றும் மஞ்சள் பொடியை தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்றுடன்(ஞாயிறு) அந்த 3 யானைகள் உயிரிழந்து 21 நாட்கள் ஆவதால், சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்றிணைந்து யானைகளை அடக்கம் செய்த இடத்தில் பெரிய பிளக்ஸ் பேனர் ஒன்றை அமைத்தனர். மேலும், அப்பகுதியில் மலர் மாலைகள் வைத்து அலங்கரித்து, யானைகள் விரும்பி உண்ணும் கரும்பு, வாழைப் பழம், பலாப் பழம், அன்னாசி பழம் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டனர். பின்னர், கண்ணீருடன் வழிபட்டு 21-ம் நாள் காரியம் நடத்தினர். இந்நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.