மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி; ரூ.100 கோடி கேட்டு மனைவி, சகோதரர்மீது நடிகர் நவாசுதீன் மானநஷ்ட வழக்கு

நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரின் முன்னாள் மனைவி ஆலியாவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆலியாவும் இரண்டு குழந்தைகளும் துபாயில் வசித்து வந்தனர். திடீரென இரண்டு குழந்தைகளையும் துபாயிலிருந்து அழைத்துக்கொண்டு மும்பைக்கு வந்த ஆலியா, நடிகர் நவாசுதீன் சித்திக்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். அடிக்கடி வீடியோவும் வெளியிட்டு வருகிறார். அதோடு நவாசுதீன் சித்திக் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொண்டு நவாசுதீன் சித்திக் தாயாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் நவாசுதீன் தன்னையும் தன்னுடைய குழந்தைகளையும் நள்ளிரவில் வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மற்றொரு புறம் தன்னுடைய குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் கூறி, குழந்தைகளை கோர்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று ஆலியாவுக்கு எதிராக நவாசுதீன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தவிர நவாசுதீனுக்கு எதிராக அவருடைய சகோதரர் சமாசுதீனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

சமீபத்தில் நவாசுதீன் தன்னுடைய முன்னாள் மனைவியுடன் சமாதானமாகச் செல்ல முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் ,புதிய திருப்பமாக நடிகர் நவாசுதீன் சித்திக் தன்னுடைய முன்னாள் மனைவி ஆலியா, தன்னுடைய சொந்த சகோதரர் சமாசுதீன் ஆகியோருக்கு எதிராக 100 கோடி ருபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி, தன்னை துன்புறுத்துவதாக நவாசுதீன் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு, “ஆலியாவும், சமாசுதீனும் எனக்கு எதிராக அவதூறு செய்திகளை சோசியல் மீடியாவில் வெளியிட, இருவருக்கும் தடைவிதிக்க வேண்டும். ஏற்கெனவே வெளியிட்ட தகவல்களை சோசியல் மீடியாவிலிருந்து அகற்ற உத்தரவிடவேண்டும். இருவரும் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். வழக்கறிஞர் சுனில் குமார் மூலம் இந்த மனுவை நவாசுதீன் சித்திக் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு, வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ரியாஷ் தெரிவித்திருக்கிறார்.

நவாசுதீன் சித்திக் தனது மனுவில், “என்னுடைய சகோதரர் சமாசுதீன் 2008-ம் ஆண்டு தனக்கு வேலை இல்லை என்று தெரிவித்தார். உடனே எனது கணக்குகளைப் பார்த்துக் கொள்ளவும், வருமான வரி, ஜிஎஸ்டி வரி விவரங்களைப் பார்த்துக் கொள்வதற்காக நியமித்தேன். நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தியதால் முழுபொறுப்பையும் என் சகோதரனிடம் ஒப்படைத்திருந்தேன். அதைப் பயன்படுத்தி என் சகோதரரும், முன்னாள் மனைவியும் சேர்ந்து 21 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டனர்.

நவாசுதீன் சித்திக்

எனது பெயரில் சொத்து வாங்குவதாகக் கூறிவிட்டு, கூட்டுப் பெயரில் சொத்து வாங்கிவிட்டார். சொத்துகளைத் திரும்பக் கொடுக்கும்படி கேட்டதால், என் சகோதரன், என் முன்னாள் மனைவியுடன் சேர்ந்து என்னை மிரட்டுகிறார். ரூ.37 கோடி அளவுக்கு வரி பாக்கி செலுத்தவில்லை என்று கூறி நோட்டீஸ் வந்த பிறகுதான், என்னுடைய சகோதரனை வேலையிலிருந்து நீக்கினேன். இதனால் என் சகோதரரும், ஆலியாவும் என்னிடம் மிரட்டிப் பணம் பறிக்க முயல்கின்றனர். ஆலியாவும் சொந்தமாக படம் தயாரிக்க ரூ.2 கோடி கொடுத்தேன். இருவரின் தவறான குற்றச்சாட்டுகள், போலி வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் எனக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனது படங்கள் தள்ளிப்போய் இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.