சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நிலவி வரும் தொடர் சர்ச்சை காரணமாகவும், திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாகவும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி விருப்ப மாறுதலில் கடலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி பொறுப்புகளை நகராட்சியில் பணியாற்றிய அலுவலர்களே கூடுதலாக கவனித்து வந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 24 , காங்கிரஸ் 6, அதிமுக 11, பாஜக 1, சுயேட்சை 6 என வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றிக்கு பின் அதிகமுவை சேர்ந்த 9 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். திமுகவை சேர்ந்த சங்கீதா மேயராகவும், விக்னேஷ்பிரியா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சி கவுன்சில் பொறுப்பேற்றதில் இருந்து சிவகாசி, திருத்தங்கல் என கவுன்சிலர்கள் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். மாநகராட்சியில் திருத்தங்கல் பகுதி புறக்கணிக்கப்படுவதாக திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்களும், திருத்தங்கல் பகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக சிவகாசி கவுன்சிலர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.மாநராட்சியில் சொத்து வரி முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலர் இந்திராணி கவுன்சில் கூட்டத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையெடுத்து திமுக கவுன்சிலர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அழைத்து மாநகராட்சி நிர்வாகம் அமைதியாக நடைபெற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருத்தங்கல் மண்டலத்திற்கு மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணையர் கிருஷ்ணமூர்த்தி போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது அதுகுறித்து தங்களுக்கு தெரியாது என மேயர், துணை மேயர் ஆகியோர் தெரிவித்தனர். அதிலிருந்து மேயர், ஆணையர் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கவுன்சிலர் இந்திராதேவியை தகுதி இழப்பு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் என்பவர் இந்திய தேர்தல் ஆணையம், உள்ளாட்சி முறை மன்ற நடுவம், நகராட்சி நிர்வாக ஆணையரகம், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட 7 துறைகளுக்கு புகார் மனு அளித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வந்தது.
இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதினார். இதனால் கடந்த மாதம் நடைபெற இருந்த கவுன்சில் கூட்டத்தை புறக்கணிப்பது என திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் முடிவெடுத்தனர். திமுக கவுன்சிலரை தகுதி இழப்பு செய்யும் முயற்சியில் ஆணையர் எப்படி ஈடுபடாலம் எனக்கூறி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையெடுத்து ஆணையரை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையெடுத்து ஆணையர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என கவுன்சிலர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் அழுத்தம் காரணமாக ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா கடந்த 24-ம் தேதி மாலை உத்தரவிட்டார். சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படாததால் உதவி நகர் பொறியாளரிடம் ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகாசியில் மாநகராட்சிக்குரிய பணியிடங்கள் நிரபப்படாத நிலையில் தற்போது ஆணையர் பொறுப்பும் காலியாக உள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.