எனது சகோதரனின் உண்மையை கண்டு அஞ்சும் பிரதமர் மோடி ஒரு கோழை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என
காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு பேசியதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்பி தகுதி பறிக்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
மக்களவை பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடதக்கது. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், ” நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் பயந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அவரது கண்களில் பயத்தை நான் கண்டேன். அதனால்தான் நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை.
என் பெயர் சாவர்க்கர் இல்லை. நான் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்,” என்று அவர் கூறினார், சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட வலதுசாரி சித்தாந்தவாதி தான் சாவர்க்கர் என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸார் போராட்டக் கோரிக்கையை காவல்துறை நிராகரித்ததை அடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லி ராஜ்காட் வெளியே சத்யாகிரகம் நடத்தினர்.
அப்போது பிரியங்கா காந்தி பேசும்போது, “தியாகியின் மகனான என் சகோதரனை துரோகி, மீர் ஜாபர் என்று சொல்கிறீர்கள். அவரது தாயை அவமதிக்கிறீர்கள். உங்கள் முதல்வர் ராகுல்காந்திக்கு அம்மா யாரென்று தெரியாது என்கிறார். என் குடும்பத்தை தினமும் அவமதிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
உங்கள் பிரதமர், மக்கள் நிறைந்த நாடாளுமன்றத்தில், ‘ஏன் இந்தக் குடும்பம் நேரு பெயரைப் பயன்படுத்தவில்லை’ என்று கூறுகிறார். அவர் முழு காஷ்மீரி பண்டிட்டுகளின் குடும்பத்தையும் அவமதிக்கிறார். ஆனால் அதெல்லாம் பாஜகவினருக்கு அவதூறு கணக்கில் வராது. என் சகோதரன் ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். அவர் ஒரு கோழை, இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன். இதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யனுமா செய்யுங்கள், என்னை சிறைக்கு அனுப்ப போறிங்களா ? வாருங்கள் எதற்கும் நான் தயார்’’ என பிரியங்கா காந்தி பேசினார்.
அதைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, ‘‘ஓபிசி சமூகத்தை அவமதித்ததாக கூறி ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி ஓபிசியா? மெகுல் சோக்ஸி ஓபிசியா? லலித் மோடி ஓபிசியா? ? அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர்கள்.
மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெங்களூர் வருகை!
கறுப்புப் பணத்துடன் தப்பியோடியவர்கள் விவகாரத்தை மட்டுமே ராகுல் காந்தி எழுப்பினார். நாடு முழுவதும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான போராட்டங்களை காங்கிரஸ் நடத்தும். பேச்சு சுதந்திரத்தை காக்க போராடுவோம். ராகுல் காந்தியுடன் நின்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.