ராகுல் காந்தி மீதான நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி, இது ஒருபோதும் அவரை பாதிக்காது. மம்தா பானர்ஜி காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க முயல்வது அவருக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்தும் சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்றைய சமூக அரசியல் தளங்களில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கருத்துரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதானி என்ற ஒருவரை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் முடக்குகின்ற மிகவும் அற்பமான ஒரு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது. அதானியை விமர்சித்த காரணத்தால், அதானி மீதான பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இதனால் ராகுல் காந்தியின் பதவியை பறிக்க, மிகக் கேடான அரசியலை, எதேச்சதிகார அரசியலை பாஜக அரசு செய்து வருகிறது.
அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஓபிசி சமூகத்தை இழிவு படுத்தி உள்ளார் என தேர்தல் ஆதாயத்தை கணக்கில் கொண்டு பிரச்சாரம் செய்கிறார். மோடி என்ற தனிநபரை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை, மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக ஒருவர் தொடுத்த அவதூறு வழக்கில் அரசியல் தலையீடு செய்து இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க வைத்து அவரது பதவி பறிபோகும் நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி. இது எந்த வகையிலும் ராகுல் காந்தியை பாதிக்காது. ஆனால், ராகுல் காந்தியை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்து எதிரியே இல்லாத தேர்தல் களத்தை சந்திக்கிற, மிகவும் இழிவான ஒரு அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. இது வன்மையாக கண்டனத்திற்குரியது. விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தேதியை பின்னர் அறிவிப்போம், சென்னையில் எனது தலைமையில் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத போக்கை, பாசிச போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ராகுல் காந்தி அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. பின் வாங்கத் தேவையில்லை. நாட்டின் ஒற்றுமைக்காக அவர் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பாஜகவையும், மோடியையும் அவர் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறார். அவர் ஒரு நல்ல நோக்கத்திற்காக, இந்தியாவையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதற்காக, பாசிச சக்திகளை எதிர்த்து போரிடுகிறார். அவருடைய போராட்டம் மேலும் ஓங்கிச் செல்ல வேண்டும். ஜனநாயக சக்திகள் அவருக்கு துணை இருக்கும். அவருடைய இந்த போராட்டம் வெல்லும் என்றவரிடம் கச்சத்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்…
கச்சத்தீவு தொடர்ந்து பிரச்னைக்கு உள்ளான ஒன்றாகவே உள்ளது. அதில், சிங்களர்கள் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் நடத்துகின்ற விழாவில் குளறுபடிகளை செய்வது வன்முறையை தூண்டுவது போன்ற நடவடிக்கைகளில் சிங்களர்கள் ஈடுபடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய அரசு இந்த விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதே இல்லை.
காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்த முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளது குறித்த கேள்விக்கு… மம்தா பானர்ஜி அவர்கள் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என முயற்சித்தால் அது அவருக்கும் நல்லதல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல. மிகவும் ஆபத்தான பாசிச சக்தியான பாஜகவிற்கு இது பயன் தரக்கூடியதாக அமைந்துவிடும். மம்தா அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் நாட்டு நலன் கருதி பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு காங்கிரசோடு இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மாண்புமிகு முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அந்த சூதாட்டத்தை தடை செய்ய ஆளுநர் தயாராக இல்லை. அது அவருடைய நிலைப்பாடு அல்ல, பாஜக அரசின் நிலைப்பாடு. இதிலிருந்து பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் இந்துக்களின் அல்லது பொது மக்களின் நலனுக்கானவர்கள் அல்ல. இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாவை ஆளுநர் சட்டப்படி திருப்பி அனுப்ப முடியாது. அதனை அவர் அங்கீகரித்து தான் ஆக வேண்டும், பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM