ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அவர் தண்டிக்கப்பட்டவுடன் எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அதானி தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இதேபோல் ராகுல்காந்தி மீது மேலும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு தானேவில் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி மகாத்மா காந்தியை கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொடர்புபடுத்தி பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஆர்எஸ்எஸ் மகாத்மா காந்தியை கொன்றதாக தெரிவிக்கவில்லை, அந்த இயக்கத்தோடு தொடர்பில் இருந்தவர்களே காந்தியை கொலை செய்தனர் என்று பேசியதாக கூறினார். 2015 ஆம் ஆண்டு அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தன்னை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. பார்பெட்டா சத்ரா மடாலயத்துக்குள் நுழைய முற்பட்டபோது பெண் பக்தர்கள் முன்பு நிறுத்தி தன்னை தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி அஞ்சன் போரா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியுடன் அமித்ஷாவை தொடர்புபடுத்தி பேசியதாகவும், கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் ஆர்எஸ்எஸூக்கு தொடர்பு இருப்பதாக பேசியதாகவும் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது அவதூறு பரப்பியதாக இன்னும் சில வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. அதேநேரத்தில், ராகுல் காந்தி தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது ஒரு அவதூறு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.