சிவகாசி மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் அழுத்தம் காரணமாக, சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய சிவகாசி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முயற்சி செய்துவருவதாக பேசப்பட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கவுன்சிலர் இந்திராதேவியை தகுதி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் கவுன்சிலர் ரவிசங்கர் என்பவர் இந்திய தேர்தல் ஆணையம், உள்ளாட்சி முறை மன்ற நடுவம், நகராட்சி நிர்வாக ஆணையரகம், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட 7 துறைகளுக்கு புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகார் மனு குறித்து நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று, தமிழக அரசு வழக்கறிஞருக்கு ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிறது.
இதனையறிந்த திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் ஒன்று கூடி, கடந்த கவுன்சில் கூட்டத்தை புறக்கணிப்பது என முடிவெடுத்து போர்க்கொடி தூக்கினர்.
இதன் காரணமாக ஆணையர் விரைவில் மாற்றப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.