புதுடெல்லி: சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியையும் அவர் இழந்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் யாருடையது, பிரதமர் மோடி – அதானி இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பதுதான் என் கேள்வி. இதை திசைதிருப்ப பாஜக முயற்சிக்கிறது. இதனாலேயே, என் மீது
அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நான் பேசியதாக குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த சமூகத்தையும் அவமதிக்கவில்லை. அந்த ரூ.20,000 கோடி யாருடையது என்பது அவர்களுக்கு தெரியும். இதனால் பதற்றத்தில் உள்ளனர். இப்போதைய சூழல் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கிறது. எங்கள் கையில் அவர்களே (பாஜக) ஆயுதங்களை அளித்துள்ளனர். எனக்கு சிறப்பான பரிசை வழங்கியுள்ளனர். அதனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
நான் சாவர்க்கர் இல்லை: எனது பெயர் ராகுல் காந்தி. நான் சாவர்க்கர் இல்லை. நான் யாரிடமும் மன்னிப்பு கோர மாட்டேன். நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி 2 முறை கடிதம் அளித்தேன். மக்களவை தலைவரை நேரில் சந்தித்து பேசினேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இல்லை. மனதில் உள்ளதை யாராலும் தைரியமாக பேச முடியவில்லை. அனைத்து அரசு அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்றைய சூழலில் மக்களை சந்திப்பதை தவிர எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழி இல்லை.
பொதுவாக, அரசியலில் யாரும் உண்மை பேசுவது இல்லை. ஆனால், நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். அது என் ரத்தத்தில் கலந்தது. சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும் கவலை இல்லை. மக்களுக்காக குரல் எழுப்புவேன். சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்பேன். எனக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, என்னை நிரந்தரமாக தகுதி இழக்கச் செய்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். வயநாடு மக்களை மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் மக்களோடுதான் இணைந்திருப்பேன். எனக்கு ஆதரவு அளித்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல்?: குற்றவியல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், வயநாடு எம்.பி. பதவியை ராகுல் இழந்துள்ளார். இதுதொடர்பான அறிவிக்கையை மக்களவைச் செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
தேர்தல் ஆணையத்துக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இதன்படி, செப்.22-க்குள் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.