புதுச்சேரி: ”விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரம் – சிதம்பரம் வரையிலான பணிகள் நவம்பர் மாதம் முடிந்து, சாலை பயன்பாட்டிற்கு வரும்” என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., துார நெடுஞ்சாலையை (45 ஏ), நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ. 6,431 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில், விழுப்புரம் (ஜானகிபுரம்) – எம்.என்.குப்பம்; மங்கலம் முதல் கடலுார் குடிகாடு சிப்காட் – சிதம்பரம்; சீர்காழி சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் வரை என நான்கு பகுதிகளாக பிரித்து, 4 ஒப்பந்த தாரர்கள் மூலம் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் – புதுச்சேரி சாலை
விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலை ஜானகிபுரம் கூட்ரோட்டில் துவங்கி வளவனுார் விவசாய நிலங்கள் வழியாக 16 கி.மீ., புறவழிச் சாலையாக கெங்கராம்பாளையத்தை அடைகிறது. அங்கிருந்து மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பம் வரை 45 மீட்டர் அகல சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது.
எம்.என்.குப்பத்தில் இருந்து விவசாய நிலம் வழியாக கடலுார் மாவட்டம் செல்கிறது. இதில், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை, கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பத்தில் மேம்பாலம் அமைகிறது. கண்டமங்கலத்தை தவிர்த்த மற்ற இடங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது.
எம்.என்.குப்பம் – கடலுார் குடிகாடு
எம்.என்.குப்பத்தில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து செல்லும் நான்கு வழிச்சாலை, மங்கலம், உறுவையாறு, கோர்க்காடு, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், அரங்கனுார், சேலியமேடு, பாகூர் வழியாக, கடலுார் வடபுறம் கீழ்பாதியை அடைக்கிறது.
அங்கிருந்து, உடலப்பட்டு, புதுக்கடை, இளஞ்சிப்பட்டு, நத்தப்பட்டு, கோண்டூர், பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, திருவந்திபுரம், ராமாபுரம் வழியாக, 33.6 கி.மீ., துாரம் கடந்து, கடலுார்-சிதம்பரம் சாலையில் கடலுார் சிப்காட் குடிகாடு அருகே இணைகிறது.
இந்த பாதையில் கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆற்றில் இரண்டு மெகா பாலங்கள் அமைக்கப்படுகிறது.
கடலுார் – நாகப்பட்டினம்
கடலுார் சிப்காட்டில் இருந்து சிதம்பரம் வரை பழைய சாலையை அகற்றி புதிய சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. சிதம்பரம் புறவழிச்சாலை துவங்கி, கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்துடன் புறவழிச்சாலை அமைகிறது.சீர்காழி சட்டநாதபுரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர், பொறையார் வழியாக காரைக்காலுக்கு வெளியே புறவழிச் சாலையாக கடந்து, நாகப்பட்டினத்தை அடைகிறது.
57 சதவீத பணி
விழுப்புரம் – எம்.என்.குப்பம் வரையிலான சாலை பணியில் 57 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளது. எம்.என்.குப்பத்தில் இருந்து கடலுார் சிப்காட் வரையிலான 2ம் கட்ட பணியில் 41 சதவீத பணியும், கடலுார் – சிதம்பரம் இடையிலான பணிகள் 42 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த மூன்று பணிகளும் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.சாலை பணிகள் விறுவிறுப்பாக நடப்பதால், நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பணிகள் முடிந்து நான்கு வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய (நகாய்) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு மாதத்தில் தீர்வு
போக்குவரத்து அதிகம் உள்ள புதுச்சேரி – விழுப்புரம் சாலையில், எம்.என்.குப்பத்தில் இருந்து மதகடிப்பட்டு வரை நான்குவழி சாலை பணியால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஒரு மாதத்தில் சர்வீஸ் சாலைப் பணிகள் முழுமையாக முடிந்து , வாகன போக்குவரத்து சீராகும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாமதம் ஏன்?
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான 4 பேட்ஜ் பணியில், சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் இடையிலான பணிகள் கடந்த 2020 ஜனவரி மாதம் துவங்கியது. பிரதமர் நரேந்திரமோடி இந்த பகுதி சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இப்பணிகளை கடந்த 2022 அக்டோபர் மாதத்துடன் முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல பிரச்னையால் இப்பணியில் 15 சதவீதம் மட்டுமே தற்போது முடிந்துள்ளது.நிர்வாக சிக்கல்கள் முடிந்து, தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்