சென்னை மாநகராட்சி நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதற்கு ஸ்பாஞ்ச் பார்க் (sponge park) அதிகளவு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தொகையும், தொழில் வளர்ச்சியும் சென்னையில் குவிந்துள்ளதால்bஎங்கு பார்த்தாலும் குடியிருப்புகளும் கட்டிடங்களும் நிரம்பி இருக்கும். நீர்நிலை, காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகிய இயற்கை வளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டவையே இக்கட்டிடங்கள். இதனால் தண்ணீர் பற்றாக்குறையையும், பெருவெள்ளத்தையும் சென்னை தொடர்ந்து சந்திக்கிறது. இப்பிரச்சனையை சரிசெய்ய சென்னை மாநகராட்சி பல முயற்சிகள் எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஸ்பாஞ்ச் பார்க் (sponge park) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பாஞ் சிட்டி என்றால் நகரமயமான சூழலிலும் எஞ்சிய நிலப்பரப்புகளில் நிலத்தடி நீரை சேமிப்பது, அதனைச் சுற்றி மரங்கள் நட்டு நிலத்தை பசுமையாக்கும் திட்டமாகும். ஸ்பாஞ்ச் சிட்டி (sponge city) என்னும் வார்த்தை முதன்முதலில் சீனாவில் உருவாகியது. சீனப் பேராசியர் கொஞ்சியான் யூ (Professor Kongjian YU) இந்த திட்டத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது. வட சீனாவில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை இருக்க, ஆனால் தென் சீனாவில் தேவைக்கு அதிகமான நீராதரம் இருந்தது. இதனை சமப்படுத்த எஞ்சிய நிலப்பரப்புகளில் தண்ணீரை சேமிக்கலாம். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்யலாம் என்ற திட்டத்தை அடிப்படையாக கொண்டு சீன அரசு இத்திட்டத்தை அங்கீகரித்தது. ஸ்பாஞ்ச் சிட்டிக்கும் ஸ்பாஞ்ச் பார்க்கிற்கும் சிறு வேறுபாடு உள்ளது.
சென்னையில் அமைக்க உள்ள ஸ்பாஞ்ச் பார்க் திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து மாநகராட்சியின் முதன்மை பொறியாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், “சென்னையினுடைய பத்து வருட மழை பொழிவு டேட்டாவை பார்த்தோமானால் 3 வருடங்கள் கனமழையும், 7 வருடங்கள் தண்ணீர் பற்றாக்குறையினாலும் மக்கள் அவதிப்பட்டது நமக்கு தெரியவருகிறது. மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது இயல்பு தான். மக்கள் தண்ணீருடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். மழைநீரை கையாள்வதில் சிக்கல் உள்ளது. தேங்கிய தண்ணீரை பம்ப் வைத்து கடலுக்குள் செலுத்துவதும், கடல் தண்ணீரை மறுசுழற்சி செய்வதும் அரசுக்கு பொருளாதாரசுமையை ஏற்படுத்துகிறது.
இதனை சரிசெய்ய மாநகராட்சி ஏற்படுத்திய திட்டமே ஸ்பாஞ்ச் பார்க் திட்டம். வெளிநாடுகளில் செயல்படுத்தப்படும் ஸ்பாஞ்ச் சிட்டி திட்டத்திற்கும், சென்னையில் செயல்படுத்த திட்டமுள்ள ஸ்பாஞ்ச் பார்க் திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக ஸ்பாஞ்ச் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். ஆனால் நம்மூரில் இருக்கும் பூங்காக்களில் குழிகளை தோண்டி தண்ணீரை சேமிப்பது தான் ஸ்பாஞ்ச் பார்க் திட்டம், அடிப்படையில் இது மழைநீர் சேகரிப்பு திட்டம் போல் தான் செயல்படும்” என்றார்.
சென்னையில் கங்கை அம்மன் கோவில் தெரு அருகில், முரசொலி மாறன் பூங்கா, மேதின பூங்கா உள்ளிட்ட 57 இடங்களில் ஸ்பாஞ் பார்க் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 7.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பூங்கா துறை அளித்த தகவல் மூலம் தெரியவருகிறது. இதுவரை ஆறு, ஏழு, எட்டு, பதின்மூன்று ஆகிய மண்டலங்களில் ஸ்பாஞ்ச் பார்க்கிற்கான வேலை நடைபெறுவதாகவும் பூங்காதுறை தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து நீரியல் வல்லுநரும் பேராசிரியருமான ஜனகராஜனிடம் பேசினோம். அவர், “இன்று சென்னை போன்ற மாநகரங்களில் பார்க்கும் இடமெல்லாம் கான்கிரீட் தளங்கள், கார் நிறுத்தும் இடம், வீட்டு வாசல் என்று எங்கு பார்த்தாலும் கான்கிரீட் தளங்கள். இதனால் பூமிக்கடியில் நீர் ஊடுருவிப் பாய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனை சரி செய்வதற்கு ஸ்பாஞ் பார்க் திட்டத்தை அரசு முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது. ஸ்பாஞ் பார்க்கை; “கட்டமைக்கப்பட்ட சதுப்பு நிலங்கள்” என்றும் கூறலாம். இயற்கையாகவே சென்னையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் பாதியை பாழாக்கிவிட்டோம், எஞ்சியுள்ளதையாவது பாதுகாப்பது அவசியம். அதே போல் கான்கிரீட் தளங்கள் அல்லாத மண் தரைகள் நீராதாரத்துக்கு இன்றியமையாதது என்பதை மக்களும் அரசும் உணர வேண்டும். இதனுடன் ஸ்பாஞ்ச் பார்க் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீராதாரத்தை ஓரளவு பாதுகாக்க முடியும்” என்றார்.